சொத்துக்காக நேர்ந்த கொடூரம்: ஆஸ்திரேலிய கணித ஆசிரியர் இந்தியாவில் படுகொலை
இந்தியாவில் கடந்த மாதம் மாயமான ஆஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர கணித ஆசிரியர் சுனில் சர்மா, அவரது சகோதரராலேயே படுகொலை செய்யப்பட்டு, கால்வாய் ஒன்றில் உடல் வீசப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
66 வயதான சுனில் சர்மா, தனது பணி ஓய்வுக் காலத்தைத் திட்டமிட்டு வந்த நிலையில், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகருக்குச் சென்றிருந்தார்.
அங்கு தனக்குச் சொந்தமான முதலீட்டு நோக்கம் கொண்ட சொத்து ஒன்றை விற்பனை செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதே, கடந்த மே 22 ஆம் திகதி அவர் திடீரென மாயமானார்.
பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நேற்று நடத்திய அமிர்தசரஸ் காவல்துறையினர்,
சுனில் சர்மாவின் சகோதரர் சதீஷ் சர்மாவைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
சுனில் சர்மாவுக்கு தூக்க மாத்திரைகள் கலந்த பானத்தைக் கொடுத்து, பின்னர் பேஸ்பால் மட்டையால் தலையில் பலமாகத் தாக்கி சதீஷ் சர்மா அவரைக் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காவல்துறை சிரேஷ்ட கண்காணிப்பாளர் கன்வல்பிரீத் சிங் இதுகுறித்துக் கூறுகையில்,
“கொலைக்குப் பிறகு இரத்தக் கறை படிந்த மெத்தை மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பேஸ்பால் மட்டை ஆகியவற்றை அகற்றுவதற்கு சதீஷ் சர்மாவின் மனைவியும் மகனும் உதவியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த மூன்று பேரும் சேர்ந்து உடலை ஒரு கால்வாயில் வீசியுள்ளதாகவும், உடலை மீட்பதற்கான தேடுதல் பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





