தடைகள் மற்றும் போர் அழுத்தத்தில் தத்தளிக்கும் ஈரான் பொருளாதாரம்
பல தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள சர்வதேச தடைகளால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போர் சூழ்நிலை, அந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானின் புள்ளிவிபரவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 53.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. புள்ளிக்கு புள்ளி பணவீக்கம் 17.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை 375 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானிய நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், பொதுமக்கள் தினசரி வாழ்க்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அத்தியாவசியப் பொருட்களின் கடும் பற்றாக்குறை ஏற்படாதபோதிலும், விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகின்றன.
சில பகுதிகளில் விலைக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள முற்றுகை ஈரான் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஈரானின் சுமார் 80 சதவீத இறக்குமதிகள் தெற்குத் துறைமுகங்கள் வழியாக நடைபெறுகின்றன. ஆனால் தற்போது அவை முற்றுகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், துருக்கி, ஆப்கானிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கஸ்பியன் கடல் வழியாக மாற்று வர்த்தகப் பாதைகளை ஈரான் ஆராய்ந்து வருகிறது. இருப்பினும், புதிய வர்த்தக வழிகளை அமைப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், மீண்டும் பெரிய அளவிலான மோதல் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே பரவி வருவதால், நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.





