ஈரான் தூதுக்குழுவுக்கு கனடாவில் கதவடைப்பு!
கனடா வான்கூவரில் நடைபெறவுள்ள FIFA ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவந்த ஈரானிய கால்பந்து சம்மேளன அதிகாரிகள், கனடா குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முறைப்படியான விசாக்களை வைத்திருந்தும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை தொடர்பில் ஈரான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) அமைப்புடன் தொடர்புடைய மெஹ்தி தாஜ் என்பவருக்கே அனுமதி மறுக்கப்பட்டதாக கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IRGC ஐ கனடா பயங்கரவாத இயக்கமாக கருதுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தவறுதலாக நடந்ததாக ஒருபுறம் கூறப்பட்டாலும், குடியேற்ற விதிகளின்படி அவர்கள் நாட்டிற்குள் நுழையத் தகுதியற்றவர்கள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த ஈரானிய தூதுக்குழுவினர், கனேடிய அதிகாரிகளின் செயலை தங்களை அவமதிக்கும் செயல் எனக் கூறி உடனடியாகத் துருக்கிக்குத் திரும்பினர்.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் நெருங்கும் வேளையில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





