கடற்படையுடன் கொழும்பு துறைமுகம் வருகிறது இந்தியாவின் “சுனைனா”!
இந்திய கடற்படையின் சுனைனா கப்பல் ,16 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினருடன் இன்று(15) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
மும்பையில் பயிற்சியை முடித்துக்கொண்டு புறப்பட்ட சர்வதேசக் குழுவினர், கடல்வழிப் பயணம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மேலாண்மை ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.
இலங்கையில் தங்கியிருக்கும் போது, இலங்கை கடற்படை அதிகாரிகளுடன் தொழில்முறை ஆலோசனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் ஈடுபட உள்ளனர்.
‘ஒரே கடல், ஒரே பணி’ என்ற கொள்கையை முன்னிறுத்தும் இந்த நடவடிக்கை, பிராந்திய நாடுகளிடையே கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாரதப் பிரதமரின் ‘மகாசாகர்’ திட்டத்தின் கீழ், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பையும் பரஸ்பர வளர்ச்சியையும் மேம்படுத்தும் ஒரு முயற்சியாக இது அமைகிறது. இவ்வாறு ஒருமித்த பாதுகாப்பு மற்றும் நட்புறவை வளர்ப்பதே இந்த பன்னாட்டுக் கப்பல் பயணத்தின் முக்கிய இலக்காகும்.





