அமெரிக்காவிடமிருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்குகிறது இந்தியா
அமெரிக்காவிடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது.
இந்தியா – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.
இதற்கமைய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,”போர்க்களத்தில் சோதிக்கப்பட்ட ‘எப்ஜிஎம்-148 ஜாவலின்’ என்று அழைக்கப்படும் பீரங்கி எதிர்ப்பு அமைப்பை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.
தோளில் சுமந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை அமைப்பில் தானியங்கி வழிகாட்டும் முறை உள்ளது. இதன் மூலம் ஏவுகணை ஏவப்பட்ட பிறகும் தன் இலக்கைத் தானாகவே பின்தொடர்ந்து தாக்கும்.
இதனால் அதை ஏவிய வீரர் உடனடியாக மறைவிடத்துக்குச் சென்று, எதிரியின் பதில்தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். இந்த ஏவுகணை, பீரங்கியின் மேற்பகுதியில் உள்ள, வீரர்கள் உள்ளே நுழையும் ஹாட்ச் பகுதியை தாக்குகிறது. இது ஏவப்பட்டதிலிருந்து இலக்கைத் தாக்கும் வரை, ‘U’ வடிவப் பாதையில் பறந்து சென்று, துல்லியமாக இலக்கை தாக்கும் எனக் கூறப்படுகின்றது.




