இந்தியா, நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!
இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூஸிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும் என்றும், இருதரப்பு வர்த்தகம் இருமடங்காக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னதாக, ஆக்ராவில் சிறு குறு தொழில்துறையினருடன் அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“ இந்தியா-நியூஸிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆக்ராவின் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை வழங்கும்.
இந்தியாவிலிருந்து நியூஸிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இறக்குமதி வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது 2.4 பில்லியன் டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகம் பன்மடங்கு அதிகரிக்கும்.” – என்று குறிப்பிட்டார்.




