அரசியலில் இருந்து ஒதுங்குவேன்: கம்மன்பில பரபரப்பு அறிவிப்பு!
மாகாணசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஒரு சபையையேனும் கைப்பற்றினால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்.” – என்று சவால் விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மேல் மற்றும் வடமத்திய மாகாணசபைகளில் மட்டுமே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறக்கூடியதாக இருந்திருக்கும்.
ஆனால் ஆளுங்கட்சியினரின் சொத்து பட்டியல், நிலக்கரி மோசடி மற்றும் போலியான வாக்குறுதிகளால் இந்நிலைமையும் முற்றாக மாறியுள்ளது.
எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஒரு சபையைக்கூட தம்மால் வெல்ல முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும்.
அவ்வாறு நடக்காவிட்டால் அதே இடத்தில் வந்து, என்னிடம் கேள்வி எழுப்புங்கள். ஒரு சபையில் ஏனும் அரசாங்கம் வெற்றிபெற்றால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்.
இந்த அரசாங்கம் தேர்தலை நடத்தாது, அதனால்தான் குழுக்களை அமைத்து இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.” – என்றார் உதய கம்மன்பில.





