புறக்கோட்டையில் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது
புறக்கோட்டையின் நான்கு வெவ்வேறு இடங்களில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து 04 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து நான்காயிரம் போதை மாத்திரைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓல்கோட் மாவத்தையிலுள்ள மருந்தகம் ஒன்றிற்கு அருகில் 6,000 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அந்த மாத்திரைகளை வழங்கியதாகக் கூறப்படும் மற்றுமொரு நபர் மெலிபன் வீதியில் மேலும் 6,000 மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளை அடுத்து, இவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்த வத்தளை , மாபோல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முதலாம் குறுக்குத் தெருவில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார்180,000 போதை மாத்திரைகளும், இந்த வியாபாரத்தின் மூலம் ஈட்டியதாகக் கருதப்படும் 4 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் மற்றுமொருவருக்கு வழங்கியிருந்த 12,000 போதை மாத்திரைகளுடன் புறக்கோட்டை பிரதான வீதியில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரும் வத்தளை – மாபோல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





