ஐரோப்பாவில் கடும் வெப்பம் – 1300 பேர் உயிரிழப்பு
ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்ப அலை உலுக்கி வருகிறது.
இந்நிலையில் இந்த வெப்ப அலை காரணமாக இதுவரை 1300 பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், “ஐரோப்பாவில் நிலவிய அதிக வெப்பநிலையுடன் தொடர்புடைய” 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.
“வெப்ப அழுத்தம் பெரும்பாலும் ‘மௌனக் கொலையாளி’ என்று அழைக்கப்படுகிறது – மேலும் ஐரோப்பிய வீடுகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் இந்த வெப்பநிலைகளுக்காகக் கட்டப்படவில்லை,” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடும் வெப்பம் தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்ததால், ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு உட்பட கண்டம் முழுவதும் நேற்றைய தினம் சாதனை அளவிலான வெப்பநிலை பதிவாகியது.




