எரிசக்தி அமைச்சரின் இராஜினாமா : அனுர பொறுப்பேற்பாரா?
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவரின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் ராஜினாமா வரவேற்கத்தக்கது என்றாலும், அது மிகவும் தாமதமாக வந்துள்ளது என்றார்.
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றம் ஒரு நாள் முழுவதும் விவாதித்ததாகவும், ஆனால் அனைத்து NPP நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராக வாக்களித்ததன் மூலம், “அவர்கள் அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து, திறம்பட ஆதரித்ததைக் காட்டியுள்ளனர்” என்றும் கூறினார்.
“நிலக்கரி ஊழல்” ஏற்கனவே நாட்டிற்கு மில்லியன் கணக்கில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் இந்த மாபெரும் ஊழலால் பாதிக்கப்படுவது நுகர்வோர்தான். ஒரு இராஜினாமா உண்மையிலேயே இதற்கு ஈடுசெய்ய முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஜெயகோடி மீது கடந்த காலத்திலும், ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், அவரை இத்தகைய சக்திவாய்ந்த பதவியில் நியமித்ததற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பொறுப்பேற்பாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது வரலாற்றை நன்கு அறிந்திருந்தபோதிலும், ஜனாதிபதி அவரை எரிசக்தி அமைச்சராக நியமித்தார். மேலும், முதலீட்டு வாரியம் விசாரணையைத் தொடங்கிய பின்னரும் அவரைத் தொடர்ந்து ஆதரித்து வந்தார்,” என்றும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.




