அன்னை பூபதிக்கு தமிழர் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!
அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை சென்றடைந்தது.
இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஊர்தி பயணம் ஆரம்பமானது.
வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
1932 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 03ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த அன்னை பூபதி, தனது 56ஆவது வயதில் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்தார்.
விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலத்தில்,
1.உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988, மார்ச் 19ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அம்னை பூபதி ஆரம்பித்தார்.
1988 ஏப்ரல் 19 ஆம் திகதி அவர் உயிர் தியாகம் செய்தார்.





