சிரியாவில் குண்டு வெடிப்பு: அறுவர் பலி – விசாரணை தீவிரம்
மத்திய டமாஸ்கஸில் central Damascus உள்ள தேனீர் விடுதியில் (கபே) ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர் என சிரியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிரியாவின் அரச ஊடகத்தின்படி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:24 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து வெளியான காணொளிகளில், கபே கடுமையாக சேதமடைந்திருப்பதும், தரையில் இரத்தம் சிதறிக் கிடப்பதும் பதிவாகியுள்ளது.
அப்பகுதியில் உள்ள பல அரச மற்றும் தனியார் கண்காணிப்பு கமராக்களின் (சிசிடிவி) உதவியுடன் குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது குண்டுவெடிப்பு நிகழலாம் என அஞ்சப்பட்டதால், பாதுகாப்புப் படையினர் ஆரம்பத்தில் அப்பகுதியை முற்றுகையிட்டனர்.
குற்றவாளியை அடையாளம் காண போதுமான ஆதாரங்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை. இருப்பினும், புதிய அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் நாட்டில் மறைந்திருந்து இயங்கும் தீவிரவாத குழுக்களை (sleeper cells) கண்டுபிடிக்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, நீதிமன்ற விசாரணைகள் மற்றும் அருகிலுள்ள சந்தைகள் காரணமாக அப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
“நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்… பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என டமாஸ்கஸில் உள்ள அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




