பிரித்தானியாவில் தீவிர விசாரணைகளின் கீழ் 09 பேர் கைது!
பிரித்தானியாவில் பாலியல் வன்கொடுமை, கட்டாயத் திருமணம் மற்றும் நவீன அடிமைத்தனம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, மெக்சிகன், இத்தாலி , ஸ்பெய்ன், ஸ்வீடன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 06 ஆண்கள் மற்றும் 03 பெண்கள் உள்ளடங்களாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள், க்ரூவில் உள்ள வெப் ஹவுஸை தளமாகக் கொண்ட ‘அமைதி மற்றும் ஒளியின் அஹ்மதி மதம்’ (Ahmadi Religion of Peace ) என்ற மத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
2023-ஆம் ஆண்டில் அஹ்மதி மதத்தில் இருந்தபோது கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து தொடர்புடைய விசாரணை ஆரம்பமானது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை தீவிரமான குற்றச்சாட்டுகள் மீதான ஒரு வலுவான விசாரணையே தவிர, மதம் மீதானது அல்ல என்று தலைமை கண்காணிப்பாளர் காரெத் ரிக்லி (Gareth Wrigley) தெரிவித்துள்ளார்.
வீட்டிலேயே கல்வி பயிலும், அந்த சமூகத்தைச் சேர்ந்த 56 குழந்தைகளைப் பாதுகாக்க நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பரந்த சமூகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.





