விமல், உதய கம்மன்பில உள்ளிட்ட 6 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சர்வஜன பலய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து அறிக்கைகள் வெளியிட்டதன் மூலம், இவர்கள் நீதிமன்றை அவமதித்துள்ளதாக நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த விரிவான அறிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதிவான் பாசன் அமரசேன இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார, சிறிலங்கா மக்கள் கட்சித் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் மூத்த விரிவுரையாளர் மஹிந்த பத்திரன ஆகியோரும் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக இந்த விவகாரத்தை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபரான சுரேஷ் சாலேயின் மருத்துவ நிலை குறித்த தனது உத்தரவை வழங்குவதற்காக நீதிமன்றம் 2026 ஜூன் 10 திகதியை நிர்ணயித்திருந்த போதிலும், ஜூன் 7ஆம் திகதி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, வெளிப்படுத்தப்பட்ட அறிக்கைகளிலிருந்து இந்த நீதிமன்ற அவமதிப்பு உருவானதாக நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆறு நபர்களும் 2024-ஆம் ஆண்டின் 8-ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை மீறி பொது அறிக்கைகளை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.




