புதிய அரசமைப்புக்கான அரசியல் சமர் விரைவில் – எதிரணி அறிவிப்பு
“புதிய அரசியலமைப்புத் தொடர்பில் இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கும் வேலைத்திட்டத்தை எதிரணி விரைவில் ஆரம்பிக்கும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு ஆகியன தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய எதிரணியின் வேலைத்திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:
“இதற்கானதொரு அரசியல் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை நாம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளோம்.
எனினும், தெரிவுக்குழுவை அமைத்து நேரத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. இதற்கிடையில் 22 ஆவது திருத்தச் சட்ட மூலமும் வந்துள்ளது.
புதிய அரசியலமைப்பு குறித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றார்.
எனவே, புதிய அரசியலமைப்பை உருவாக்க வைப்பதற்குரிய அரசியல் வேலைத்திட்டத்தை நிச்சயம் நாம் ஆரம்பிப்போம். அது எமது பிரதான அரசியல் வேலைத்திட்டங்களில் ஒன்றாக அமையும்” என்று அவர் தெரிவித்தார்.




