சீனாவில் கண்ணாடி அணிந்து பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு எச்சரிக்கை!
சீனாவில் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்ணாடி அணிந்து பரீட்சைக்கு தோற்றுவோர் விசேடமாக கவனிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்தி மோசடி செய்வதைத் தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பல்கலைக்கழக நுழைவு பரீட்சையில் சுமார் 13 மில்லியன் மாணவர்கள் தோற்றவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குவாங்டாங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பல மாகாணங்களில் உள்ள அதிகாரிகள், கண்ணாடி அணிந்திருக்கும் பரீட்சார்த்திகளுக்கு கூடுதல் பரிசோதனையை அறிவித்துள்ளனர்.
அதன்படி, கண்ணாடிகள் பரிசோதிக்கப்படும் அல்லது சாதாரண மருத்துவக் கண்ணாடிகளுக்கு மாற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தகவல்களை அனுப்பவோ அல்லது பெறவோ திறன் கொண்ட எந்தவொரு சாதனத்தையும் பரீட்சை அறைக்குள் கொண்டு வருவது மோசடியாகக் கருதப்படும் என்றும், அது கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் சீனாவின் கல்வி அமைச்சகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.




