சமரசத்துக்கு துடிக்கும் ஈரான் – ஒருவார கால அவகாசம்
அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் விரும்புவதாகவும், கமேனியின் இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு வாஷிங்டன் ‘ஒரு வாரம் அவகாசம்’ அளித்துள்ளதாகவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மரணத்தைக் குறிப்பிட்டு , டிரம்ப் இதனைப் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் 250-வது ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் வகையில், வெள்ளிக்கிழமை இரவு மவுண்ட் ரஷ்மோரில் (Mount Rushmore) நடைபெற்ற நிகழ்வில் டிரம்ப் உரையாற்றினார்.
அப்போது அமெரிக்காவின் தனிச்சிறப்பு, கம்யூனிசத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் உலக அரங்கில் தனது நாட்டின் ராணுவ பலம் குறித்து அவர் நீண்ட நேரம் பெருமிதத்துடன் பேசினார்.
“நாம் வெனிசுலாவை ஒரே நாளில் தோற்கடித்தோம், ஈரானையும் கடுமையாகத் தாக்கினோம். அவர்கள் இப்போது நம்மோடு சமரசம் செய்துகொள்ளத் துடிக்கிறார்கள். அதை அவர்கள் மிகவும் ஆவலோடு விரும்புகிறார்கள்” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.





