கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர்
அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் (16) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் அதிக சனத்தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்,
“திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசம் அதிக சனத்தொகையைக் கொண்ட ஒரு பகுதியாகும்.
கிண்ணியா பிரதேச மக்களுக்கு மாத்திரமன்றி, அதனைச் சுற்றியுள்ள பல கிராமப்புற மக்களுக்கும் கிண்ணியா தள வைத்தியசாலையே பிரதான சுகாதாரச் சேவைகளை வழங்கி வருகின்றது.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர், இட நெருக்கடியானதொரு சூழலில் இத்தாலிய மக்களின் நன்கொடையின் மூலம் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு தற்போது இயங்கி வருகின்றது.
இந்த நிலையில், இந்த வைத்தியசாலையின் தரத்தினை உயர்த்துமாறு பிரதேச மக்களால் பல வருடங்களாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளைச் சரியான முறையில் ஆராய்ந்து, இந்த வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர முடியுமா என்பது குறித்துப் பரிசீலிப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.”
வைத்தியசாலையின் நிலைமைகளை ஆராய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மேலும் விளக்கிய அவர்,
“மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட உப குழு (நிபுணர் குழு) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தீர்மானத்தையும் நாம் அரசியல் இலாபங்களுக்காக எடுக்க விரும்பவில்லை. அதனாலேயே இந்த நிபுணர் குழுவை நியமித்துள்ளோம்.
இந்தக் குழுவின் அறிக்கை சாதகமாக அமையும் பட்சத்தில், சுகாதார அமைச்சுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அடுத்தகட்ட முன்னெடுப்புகளைச் செய்வோம். ஏற்கனவே கந்தளாய் ஆதார வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, கிண்ணியா வைத்தியசாலைக்கும் இதனைச் செய்யக்கூடிய சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.





