கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான தேவை கடுமையாகப் பாதிப்பு – தென் கொரியா எச்சரிக்கை
போரின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான தேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய கப்பல் கட்டும் நிறுவனமான ஹன்வா ஓஷன் (Hanwha Ocean) தெரிவித்துள்ளது.
வர்த்தகக் கப்பல்களுக்கான தேவை குறைந்து வருவதால், உலக வணிகத்தில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் எனப்படும் விஎல்சிசி (VLCC) வகை கப்பல்களுக்கு போரின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்துள்ளதுடன், சில கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை (Hormuz Strait) பகுதியில் சிக்கியுள்ளன. மேலும் அந்த முக்கிய கடல் வழிப்பாதை தொடர்ந்து மூடப்பட்டிருப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பணவீக்கம் மற்றும் போர் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால், கொள்கலன் கப்பல்களுக்கான தேவையும் குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.




