இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும், 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அத்திணைக்களம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
இந்த இலக்குகளை அடைந்துகொள்வதில் நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, தேசிய e-invoicing முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், முழுமையான திட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க , உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.எச். பெர்னாண்டோ மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.





