அரசியல் இலங்கை செய்தி

“புலிகள் அமைப்பின் கொள்கைகளை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது” – நாமல்

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்பதை அரசு விளக்க வேண்டும்.”

என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து, தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே நாமல் ராஜபக்சஷ எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“அரசின் இத்தகைய இரட்டை நிலைப்பாடும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான இந்த நாடளாவிய கைதும் கவலையளிக்கின்றன. பாடல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான விடயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இசையும் கலைத்துவ வெளிப்பாடும் இப்போது பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுமானால், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் இத்தகைய பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது அரசியல் நலன்களுக்காக இத்தகைய பாடல்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்தார் என்று கூறப்படுகின்றது. அப்போது பொலிஸார் எங்கே இருந்தனர்? அப்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எங்கே இருந்தது?

விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகவே இன்றும் காணப்படுகின்றது.

புலிகள் அமைப்பின் கொள்கைகளை எவரும் ஊக்குவிப்பதையோ அல்லது வெளிப்படுத்துவதையோ நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனினும், ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், ஓர் இளம் பாடகரும் ஒரே மாதிரியான செயல்களுக்காகக் குற்றம் சாட்டப்படும் போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்புக் கிடைப்பதும், மற்றவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதும் முற்றிலும் தவறானதாகும்.

அரசியல் நோக்கங்களுக்காகவும் தேவைகளுக்காகவும் சட்டத்தை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது. அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும், சாதாரண இளைஞர்களுக்கு பிறிதொரு சட்டமும் இருப்பது ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை என்று அரசு நம்பினால், அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

இல்லையெனில், இந்தக் கைது அதிகாரத்தைத் தெரிந்தெடுத்துத் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு செயலாகவே பார்க்கப்படும்.” – என்று நாமல் ராஜபக்சஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!