சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் படுகொலை : புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை!
சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சந்திரசேகரம் என்ற நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகாலமாக தனது குடும்பத்தினருடன் சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்த அவர், இரண்டு மாதகால விடுமுறையை கழிப்பதற்காக யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதிக்கு பின்னர் அவரை தொடர்பு கொள்ள குடும்பத்தினர் முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை. இதனையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கு அமைய யாழில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அங்கு துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து சடலத்தை இனங்கண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 08 இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்த தகவலை கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராக்களையும் ஆய்வு செய்துள்ளனர். இருப்பினும் சம்பவ தினத்தன்று பதிவான காட்சிகள் அதில் இடம்பெற்றிருக்கவில்லை. அத்துடன் சிசிரிவி கெமரா உடைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சம்பவ தினத்திற்கு முன்பு பதிவான காட்சிகளை பொலிஸார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அதில் முகமூடி அணித்த மர்ம நபர் ஒருவர் சமையலறை வழியாக வீட்டிற்குள் நுழைவது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு வீட்டிற்குள் புகுந்தவர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களை சேதமாக்கிய பின்னர், அவரை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் தமிழர்கள் பலர் பணம் மற்றும் நகைக்காக மர்மக் குழுவினரால் இலக்கு வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




