கமேனியின் இறுதிச்சடங்கு – பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள்ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என ஈரானின் அரசு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கிய முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி, கூட்டு வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி கமேனி கொல்லப்பட்டார்.
அவரது அடக்க சடங்குகள் தொடக்கத்தில் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், போர் நீடித்ததன் காரணமாக அது தாமதமானது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் தொடங்கி, தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இறுதிச் சடங்குகளும் ஊர்வலங்களும் நடைபெறவுள்ளன.
ஈரான் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளின் பல்வேறு நகரங்களிலும் இதற்கான மத வழிபாட்டுச் சடங்குகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தெஹ்ரானில் பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்.
கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரின் உடல்கள் அடங்கிய பெட்டிகள் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈரானின் மிகப்பெரிய தொழுகை வளாகங்களில் ஒன்றான கிராண்ட் மொசல்லாவில் (Grand Mosalla) வைக்கப்பட்டுள்ளன.
இறுதிச் சடங்கில் முக்கிய உலகத் தலைவர்கள்
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள், ஏப்ரல் மாத போர்நிறுத்தம் மற்றும் ஜூன் மாத உடன்படிக்கை ஆகியவற்றில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா (Pabitra Margherita) மற்றும் பீகார் மாநில ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் (Syed Ata Hasnain) ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலான ஆளுநர் ஹஸ்னைன், இந்தியாவில் பொதுப் பதவியில் இருக்கும் மிக மூத்த ஷியா பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்களான சல்மான் குர்ஷித் மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோரும் இந்தியக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev) சடங்கில் பங்கேற்பதை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான ஹே வெய் (He Wei) தெஹ்ரானில் நடக்கும் இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், தலிபான் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான முதலாவது துணைப் பிரதமர் அப்துல் கனி பராதரும் இதில் பங்கேற்கின்றனர்.
பங்களாதேஷ் நாடாளுமன்ற சபாநாயகர் ஹபிசுதீன் அகமது இந்த அரசு முறை இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளார்.
துருக்கியின் துணை அதிபர் ஜவ்தேத் யில்மாஸ், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான், ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் ஜார்ஜிய அதிபர் மிக்ஹெய்ல் காவெலாஷ்விலி ஆகியோரும் இந்த நினைவேந்தலில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.





