IS அமைப்புடன் தொடர்புடைய பெண் கைது! 10 ஆண்டுகள் சிறை?
ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்ட 34 வயது பெண்பெண்மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத அமைப்பொன்றில் (IS) உறுப்பினராக இருந்ததோடு, தடை செய்யப்பட்ட போர்ப் பகுதிக்குள் அவர் நுழைந்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா திரும்பிய இவர், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ்(AFP) தெரிவித்துள்ளது.
அவர் இன்று பிற்பகல் மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுகளுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சிரியாவின் ‘அல்-ரோஜ்’ (al-Roj) முகாமில் இருந்து அண்மையில் ஆஸ்திரேலியா அழைத்து வரப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் குழுவில் இப்பெண் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘அல்-ரோஜ்’ முகாமில் இருந்து இந்த மாதத்தில் இரு குழுக்கள் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளன.
செவ்வாய்க்கிழமை அன்று சிட்னி மற்றும் மெல்போர்ன் வந்தடைந்த இரண்டாவது குழுவில் உள்ள யாரும் உடனடியாகக் கைது செய்யப்படவில்லை.
ஆனால், முதலாவது குழுவில் வந்திறங்கிய பெண்களில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் மீது அடிமைப்படுத்துதல் உள்ளிட்ட மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும், மற்றொரு பெண் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.





