உக்ரைனுக்கு ஆதரவு – பிரான்ஸில் ஒன்றுக்கூடும் 25 நாடுகளின் தலைவர்கள்
உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி நாளை மற்றும் நாளை மறுதினம் பாரிஸிற்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 14 கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி”யின் கூட்டத்தை நடத்த பிரான்ஸ் தயாராகி வருகிறது.
இதன்போது உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விவாதிப்பதற்காக 25 நாடுகளின் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் பாரிஸில் ஒன்றுக்கூடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் உருவாக்கப்பட்டு, பிரித்தானியாவுடன் இணைந்து வழிநடத்தப்படும் இந்தக் கூட்டணி, தற்போது 37 நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது.
இக்கூட்டணி சில சந்தர்ப்பங்களில் நேரில் ஒன்றுக்கூடுவதுடன், சில சந்தர்ப்பங்களில் காணொளிக் கருத்தரங்கு மூலமாக சந்திப்புகளை நடத்துகிறது. மோல்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய இரண்டு புதிய உறுப்பினர்கள், இம்முறை நடைபெறும் கூட்டத்தில் முதல் முறையாகப் பங்கேற்க உள்ளனர்.
உக்ரைனுக்கு ஆதரவான புதுப்பிக்கப்பட்ட ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வை “வலுப்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டே இம்முறை இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.




