மனநல ஆதரவிற்காக AI மென்பொருளை நாடும் இளைஞர்கள் அதிகரிப்பு!
மனநல ஆதரவிற்காக நான்கில் ஒருவர் AI மென்பொருளை பயன்படுத்துவதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
குறிப்பாக இளம் தலைமுறையினரே இந்த மென்பொருளை பயன்படுத்துவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
கிட்டத்தட்ட பாதி ஐரோப்பிய இளைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவிற்காக செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
சுகாதார நிபுணர்களுடன் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதை விட இது தங்களுக்கு எளிதாக இருப்பதாக அவர்கள் கருதுவதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 11-25 வயதுடையவர்களில் 51 சதவீதம் பேர் AI மென்பொருளை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.
தனிப்பட்ட கலந்துரையாடல்களுக்கு நண்பர்களும் பெற்றோருமே முதன்மைத் தேர்வுகளாக உள்ளனர், ஆனால் பதிலளித்தவர்களில் 90 சதவீதம் பேர் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இளைஞர்களின் மனநலம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளையும் இந்தக் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் மனநல ஆதரவிற்காக செயற்கை நுண்ணறிவை மட்டுமே சார்ந்திருப்பதற்கு எதிராக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.




