தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடாவிடின் ‘தாயகம்’ பறிபோகும்!
“தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்துவரும் ஒற்றுமை முயற்சிக்கு மத்தியில், தமிழ்த் தேசியப் பேரவை பிறிதொரு மாற்றுக் குழுவை முன்மொழிந்துள்ளமையானது தமிழ்க் கட்சிகளின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்”
இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அண்மைக் காலமாகப் பல சந்திப்புகளைக் கொழும்பில் நடத்தியிருந்தது.
இதில் பல்வேறு பொது இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில், தற்போது ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை எனும் பெயரில் 28 பேர் கொண்ட புதிய வழிநடத்தல் குழுவொன்று கலாநிதி தி.விக்னேஸ்வரனால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரெலோ அமைப்பின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் கூறியதாவது:-
“தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகும். அதற்காகவே தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை கட்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றது.
இவ்வாறான கட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரவை மாற்றுக் குழுவொன்றை முன்மொழிவது ஆரோக்கியமானதல்ல. இது ஒற்றுமைக்கு வித்திடாது மாறாகத் தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஓர் அபாயகரமான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடாவிடின், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிற தரப்பினரின் கைகளுக்குச் செல்லும் ஆபத்து உள்ளது.
எனவே, குறுகிய நோக்கங்களைக் கடந்து தமிழ் மக்களின் நலனுக்காகத் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.





