Andy Burnhamமீது ட்ரம்ப் விமர்சனக்கணை தொடுப்பு
பிரித்தானியாவின் புதிய பிரதமராவதற்கான பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) குறித்து அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் தனது முதல் விமர்சனக் கணையைத் தொடுத்துள்ளார்.
பர்ன்ஹாமை ஒரு “தீவிர தாராளவாதி” (Extremely Liberal) என்று விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,
Andy Burnham எண்ணெய் ஆய்வுக்காக வட கடலை (North Sea) திறக்க வாய்ப்பில்லை என்றும், பிரித்தானியா வீழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
இதன் மூலம், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பர்ன்ஹாம் பிரதமராகப் பதவியேற்றால், அவருக்கும் டிரம்பிற்கும் இடையிலான உறவு மிகவும் சவாலானதாக இருக்கும் என்பது புலனாகின்றது.
கடந்த காலங்களில் பர்ன்ஹாம், டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த மாதம் Makerfield தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க அரசியல் துருவமயப்பட்டு நச்சுத்தன்மையாக மாறிவிட்டது என்று அவர் விவரித்திருந்தார்.
மேலும், 2021-ல் அமெரிக்க நாடாளுமன்றக் (Capitol) கட்டிடம் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட போது, பர்ன்ஹாம் தனது X பக்கத்தில், “டிரம்பிற்கு மதிப்பளித்த ஒவ்வொரு பிரிட்டிஷ் அரசியல்வாதியும் இப்போது வெட்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
புதன்கிழமை பர்ன்ஹாம் பற்றி கேட்கப்பட்ட போது டிரம்ப்,
“எனக்குத் தெரியவில்லை, அவர் ஒரு நகரத்தின் மேயராக (Mayor) இருந்தார் என்று நினைக்கிறேன். அவர் ஒரு தீவிர தாராளவாதி என்று கேள்விப்பட்டேன். அதனால் அவர் வட கடலில் எண்ணெய் எடுக்க அனுமதிக்க மாட்டார்” என்று கூறினார்.




