‘அரசு மௌனம்’ – யாழில் தொடரும் போராட்டம்!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் ,இன்று 8ஆவது வெள்ளிக்கிழமையாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாகவே இன்று போராட்டம் இடம்பெற்றது.
வலிகாமம் வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பாதுகாப்புத் தரப்பினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேறாததால் அவை இன்னும் உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகின்றன.
தமது 651 ஏக்கர் பரப்பளவிலான பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாகப் போராடி வரும் காணி உரிமையாளர்கள், தமக்கு நீதி கிடைக்கும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டங்களை முன்னெடுப்பதென எடுத்த தீர்மானத்துக்கு அமைய இன்றைய தினமும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதியுடன் இப்பகுதி மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
இதனை முன்னிட்டு, அன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாகப் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகக் காணி உரிமையாளர்கள் அறிவித்துள்ளதுடன், அதற்குப் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்றைய போராட்டத்தில் காணி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







