தையிட்டியில் தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கஜேந்திரகுமார் அவசர கடிதம்
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். மாவட்ட செயலாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
இந்தக் காணிகளை நாளைய தினம் அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளருக்கு அவர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த 17 வருடங்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராடி வரும் நிலையில், காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த அளவீட்டு நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் காணிகளின் எல்லைகள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், போதிய காலவகாசம் இன்றி அவசரமாக அளவீடு செய்வது காணி உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, இந்த அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்தி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காணி உரிமையாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, வெளிப்படையான இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.





