புதிய ஆட்சி மலர்ந்த பின் சிரியா சென்ற முதல் ஐரோப்பிய தலைவர்
சிரியாவில் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் , 2024-ல் பஷர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய பிறகு, அங்கு செல்லும் முதல் ஐரோப்பிய தலைவர் என்ற பெருமையுடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமையன்று டமாஸ்கஸ் சென்றடைந்தார்.
13 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் சின்னாபின்னமான சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில், அசாத் காலத்தில் சிரியாவைத் தனிமைப்படுத்திய மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் ஜனாதிபதி ஷாரா நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளார்.
ஒருகாலத்தில் அல்-கொய்தா அமைப்பின் தளபதியாக இருந்த ஷாராவின் தலைமையின் கீழ், சிரியா பெற்றுள்ள புதிய புவிசார் அரசியல் மாற்றத்தை மக்ரோனின் இந்த வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“சிரிய மக்களுக்கு பிரான்ஸ் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். பன்முகத்தன்மையுடன் கூடிய இறையாண்மையுள்ள, அண்டை நாடுகளுடன் அமைதி பேணும் ஒரு சிரியாவிற்காக… நாம் இணைந்து ஒரு புதிய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கான பக்கத்தைத் தொடங்குவோம்,” என்று மக்ரோன் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1920 முதல் 1946-ல் சுதந்திரம் பெறும் வரை சிரியா, பிரான்ஸின் கட்டுப்பாட்டிலேயே (French Mandate) இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




