நிதி அமைச்சின் சைபர் மோசடி விசாரணை – இலங்கைக்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடன் கொடுப்பனவுகளில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பினுள் ஊடுருவியமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தூதரகம் மற்றும் நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளன.
அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிறுவனம் (Australian Export Finance Agency) மற்றும் திறைசேரிக்கு இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் இடைமறித்து, வங்கி கணக்கு இலக்கங்களை மாற்றி பணத்தை தமது கணக்குகளுக்கு திசை திருப்பியுள்ளனர்.
இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவிலும் இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, கணக்கு இலக்கங்களில் ஏற்பட்ட மாற்றம் குறித்த சந்தேகத்தினால் இந்த மோசடி அம்பலமானது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), CERT நிறுவனம் மற்றும் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, இந்த விசாரணைக்கும் அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.





