இஸ்ரேலின் பொருளாதாரத்தை முடக்க திட்டம் – ஐரோப்பிய தலைவர்கள் விவாதம்
இஸ்ரேலியக் குடியேற்றங்களுடனான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது தொடர்பான முன்மொழிவுகளைப் பரிசீலிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று பிரஸல்ஸில் கூடவுள்ளனர்.
இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவதில் ஐரோப்பிய ஆணையம் காலந்தாழ்த்துவதாக சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் இன்று இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது தலைவர்கள் இஸ்ரேலியக் குடியேற்றங்களுடனான வர்த்தகத்தைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தடை செய்வது குறித்து விவாதிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதற்குப் பதிலளிக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே சர்வதேச சட்டத்தின்படியும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவையாகக் கருதப்படுகின்றன.
தற்போது குடியேற்றங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியை இந்த அமைப்பு தடை செய்யவில்லை என்றாலும், அத்தகைய பொருட்கள் மீது அதிக சுங்க வரிகள் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




