துப்பாக்கியுடன் உலாவந்த 10 பேர் திருமலையில் கைது!
திருகோணமலை , கோமரங்கடவல-மல்போறுவ பிரதான வீதியில் துப்பாக்கியுடன் டொல்பின் வேனில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது.
கோமரங்கடவல , பாணந்துறை மற்றும் அட்டுலுகம பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் தூர இடங்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் எனவும் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக சென்றவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.




