நாடு கடத்தலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா: 2,300 மெக்சிகோ பிரஜைகள் வெளியேற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த நாடு கடத்தல் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இதன்படி, அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் மெக்சிகோ குடிமக்களை நேரடியாக மெக்சிகோவிற்கு அனுப்பாமல், குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா நாடு கடத்தி வருவதாக அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 2,300 மெக்சிகோ நாட்டவர்கள் குவாத்தமாலாவுக்கும், பல டஜன் கணக்கிலானோர் ஹொண்டுராஸுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
வழக்கமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் மெக்சிகோ குடிமக்கள் தரை அல்லது வான் வழியே நேரடியாகவே தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குவாத்தமாலா மற்றும் மெக்சிகோ அதிகாரிகளின் விளக்கம்
அமெரிக்காவிலிருந்து இதுவரை 2,284 மெக்சிகோ குடிமக்கள் ‘இடைப்பயண நிறுத்தம்’ (Transit stopover) அடிப்படையில் குவாத்தமாலாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி பெர்னார்டோ அரேவாலோ (Bernardo Arévalo) உறுதிப்படுத்தியுள்ளார்.
“குவாத்தமாலா குடிமக்களை ஏற்றி வரும் விமானங்களிலேயே இவர்களும் அழைத்து வரப்படுகின்றனர்.
மெக்சிகோ குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து, அவர்கள் நாட்டிற்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பஸ்கள் மூலம் தெற்கு மெக்சிகோ எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இதற்கான செலவினங்களை மெக்சிகோ அரசாங்கமும், சில சந்தர்ப்பங்களில் அமெரிக்காவும் ஏற்கின்றன” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மெக்சிகோவின் தேசிய குடிவரவு நிறுவனம் (INM), “நாடு கடத்தப்பட்டவர்கள் மீண்டும் எல்லை கடந்து அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுப்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாகும்” எனக் கூறியுள்ளது.




