ஆஸ்திரேலியாவை உலுக்கிய பழங்குடியின சிறுமியின் மரணம்: மக்கள் அணிதிரண்டு இறுதி அஞ்சலி
ஆஸ்திரேலியாவின் வடக்கு மண்டல Northern Territory தலைநகரான ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் (Alice Springs), கடந்த ஏப்ரல் மாதம் நாட்டையே உலுக்கிய மற்றும் அப்பகுதியில் வன்முறை மோதல்களை ஏற்படுத்திய ஐந்து வயது பழங்குடியின சிறுமியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான துயருற்ற மக்கள் சனிக்கிழமை திரண்டனர்.
பழங்குடியின கலாச்சார வழக்கப்படி குமாஞ்சாய் லிட்டில் பேபி (Kumanjayi Little Baby) என அழைக்கப்படும் அச்சிறுமியின் கொலையும், அதைத் தொடர்ந்து சந்தேக நபரைக் கண்டுபிடித்து உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்ட பின்னரான அவரது கைது நடவடிக்கையும், மண்டலத் தலைநகர் டார்வினுக்குத் தெற்கே சுமார் 1,250 கி.மீ (776 மைல்) தொலைவில் அமைந்துள்ள 25,000 மக்கள் தொகை கொண்ட அந்த நகரில் பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின.
சனிக்கிழமையன்று, சிறுமி குமாஞ்சாய் லிட்டில் பேபிக்கு பிடித்த இளஞ்சிவப்பு (pink) நிற உடைகளை அணிந்தவாறு வந்த அஞ்சலியாளர்கள், நகரின் எல்லையில் அமைந்துள்ள கார்டன் மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் பங்கேற்றனர் .
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அச்சிறுமியின் சவப்பெட்டி ஒரு கருப்பு நிறப் பாடை ஊர்தியில் (hearse) கொண்டு வரப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அச்சிறுமி உயிரிழந்தது முதல், சுமார் ஐந்தில் ஒரு பங்கு பழங்குடியின மக்களைக் கொண்ட அந்த உள்ளூர் சமூகம் “சாரி பிசினஸ்” (Sorry Business) எனப்படும் பழங்குடியினரின் மரணத்திற்குப் பிந்தைய துக்க அனுசரிப்பு மற்றும் கலாச்சார சடங்குகளை மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் உட்பட ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களில் வசிக்கின்றனர்.
இங்கு வீட்டுவசதி மற்றும் அடிப்படை சேவைகள் பெரும்பாலும் போதியளவில் இல்லை. இக்கொலை நடந்த சில நாட்களில், இம்முகாம்களில் உள்ள மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த மண்டல அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வலியுறுத்தியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 47 வயதான ஜெபர்சன் லூயிஸ் என்பவர் மீது சிறுமியின் கொலை வழக்கு உட்பட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சட்டக் காரணங்களுக்காக மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளின் விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.




