நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் – நீதி அமைச்சர்
எதிர்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் அரசாங்கமாக எதிர்கொள்வோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு மற்றும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் சிறந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே விசாரணைகள் வெளிப்படைத்தன்மையாக இடம்பெறுகிறது.
சிறைக்கைதிகளின் உரிமை பற்றி பேசும் தரப்பினர் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மனித உரிமைகள் பற்றி பேசுவதில்லை. இது கவலைக்குரியது.
சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
சிறைச்சாலைகளில் நெரிசல், போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கும், ஒழுங்குப்படுத்தப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் பெருமளவிலானோர் கைது செய்யப்படுகிறார்கள். அதனால் தான் சிறைச்சாலையில் நெரிசல் தீவிரமடைந்துள்ளது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். சிறைச்சாலைகளில் நெரிசல் காணப்படுவது என்பதால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யாமல் இருக்க முடியுமா ?
நீர்கொழும்பு சம்பவத்தில் தற்போது எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது. பழி சுமத்த முடியாது. முதலில் நிலைமை கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்” என்றார்.




