ஐ.நாவின் செயல்திறன் சரிந்துவிடும்: இந்தியா எச்சரிக்கை!
ஐ.நா. பாதுகாப்பு சபையை மறுசீரமைப்பதற்குரிய காலம் கடந்துவிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது.
மேற்படி அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றுகையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“பாதுகாப்பு சபை உட்பட ஐநாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம்.
ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் இரண்டையும் விரிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஐநாவின் செயல்திறனும் நம்பகத்தன்மையும் சரிந்துவிடும்.
ஐநா சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல எழுத்துப்பூர்வ பேச்சுவார்த்தைகளே தற்போதைய தேவை.” எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.




