சூர்யாவின் ‘கருப்பு’ படப்பிடிப்பில் அதிர்ச்சி: இலங்கை நடிகர் உயிரிழப்பு
பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு பணியாற்றிய இலங்கை நடிகர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா தனது புதிய திரைப்படமான ‘கருப்பு’ படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இதன் படப்பிடிப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த திரைபடத்திற்காக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்றக் கட்டடம் போன்று படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திரைப்படத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத் தயாராக இருந்த வேளையில், அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக படக்குழுவினர் அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தளை களுதாவளை ரத்தோட்டைவீதியை சேர்ந்த போஸ் என அறியப்படும் அழகர் கருப்புசாமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




