ஊடக நிறுவனத்திற்கு எதிரான தனியுரிமை வழக்கில் இளவரசர் ஹாரி தோல்வி
‘டெய்லி மெயில்’ மற்றும் ‘மெயில் ஒன் சண்டே’ ஆகிய நாளிதழ்களின் வெளியீட்டாளரான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக, இளவரசர் ஹாரி மற்றும் ஆறு பேர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த தனியுரிமை வழக்கில் தோல்வியடைந்துள்ளனர்.
1990 முதல் 2018 வரை தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாகப் பெற்றதாக அந்தப் பத்திரிகைக் குழுமம் மீது இளவரசர் ஹாரி மற்றும் பிற பிரமுகர்கள் குற்றம் சாட்டினர்.
தொலைபேசி அல்லது குரல் அஞ்சலை சட்டவிரோதமாக அணுகுதல், இரகசியக் கண்காணிப்பு, மற்றும் மருத்துவ, நிதிப் பதிவுகளைப் பெற முயற்சித்தல் ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
வழக்குத் தொடர்ந்த மற்ற பிரபலங்களில் சர் எல்டன் ஜோன், டேவிட் ஃபர்னிஷ், சர் சைமன் ஹியூஸ், லிஸ் ஹர்லி, சேடி ஃப்ரோஸ்ட் மற்றும் பரோனஸ் டோரியன் லாரன்ஸ் ஆகியோரும் அடங்குவர்.
தகவல்களைப் பெறுவதற்கு சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியதை அந்த செய்தித்தாள் குழுமம் வன்மையாக மறுத்தது.
முன்னதாக, சட்டவிரோதமாகத் தகவல்களைச் சேகரித்து ஒரு கட்டுரையை வெளியிட்டதற்காக, மிரர் குழுமத்திற்கு எதிராக இளவரசர் ஹாரி 15 வழக்குகளில் வெற்றி பெற்றிருந்தார்.
சன் நாளிதழின் வெளியீட்டாளரும் கடந்த ஆண்டு இளவரசர் ஹாரியிடம் மன்னிப்புக் கோரியதுடன், நியாயமான இழப்பீடு வழங்கவும் முன்வந்தார்.
மஞ்சள் பத்திரிகைகளின் தலையீடு தனது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையிலும், மனநலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இளவரசர் ஹாரி கூறியுள்ளார்.
ஊடக சுதந்திரத்திற்கும் தனிநபர்களின் தனியுரிமைக்கும் இடையிலான சமநிலையைப் பொறுத்தவரை இந்த வழக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.




