நேட்டோவிலிருந்து வெளியேறுமா அமெரிக்கா?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போர் மற்றும் கிரீன்லாந்து (Greenland) விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேட்டோ ராணுவக் கூட்டணியில் அமெரிக்கா தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்யுமாறு ட்ரம்பை சமாதானப்படுத்த ஐரோப்பிய தலைவர்கள் முயன்று வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவிற்கு வருகை தந்த ட்ரம்ப், இம்மாநாட்டை நடத்துகின்ற துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகனுடனான தனது நட்பு மட்டும் இல்லையென்றால், தான் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்று கூறினார்.
மேலும், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அவர் நிராகரிக்கவில்லை.
முன்னதாக, தங்களது சொந்தப் பாதுகாப்புக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் செவிசாய்ப்பதை நிரூபிக்கும் வகையில், குறைந்தது 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள கூட்டு ஆயுத ஒப்பந்தங்களை நேட்டோ கூட்டணி நாடுகள் வெளியிட்டிருந்தன.
தனது முதலாவது மற்றும் இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலங்களிலும் நேட்டோ அமைப்பைக் கடுமையாக விமர்சித்து வந்துள்ள ட்ரம்ப், இந்தக் கூட்டணி மீது தான் “மிகுந்த ஏமாற்றம்” அடைந்துள்ளதாகவும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் போது அமெரிக்கா நேட்டோ நாடுகளால் “முறையாக நடத்தப்படவில்லை” என்றும் கூறினார்.
செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி எர்டோகனுடன் இணைந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ட்ரம்ப், “நாம் ஏன் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைச் செலவிட வேண்டும், ஆனால் நமக்குத் தேவைப்படும்போது அவர்கள் நமக்காக அங்கிருப்பதில்லை? நாம் எப்போதும் அவர்களுக்காக இருந்திருக்கிறோம்” என்று சாடினார்.
போரின் போது ஐரோப்பிய நாடுகள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்தவோ அல்லது தங்களது பிராந்தியங்களில் உள்ள ராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் பயன்படுத்தவோ அனுமதிக்கத் தவறிவிட்டதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், தங்களது பொருளாதாரத்தைப் பாதித்த மற்றும் ஐரோப்பாவில் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய இப்போரைப் பற்றி தங்களிடம் முன்கூட்டியே கலந்தாலோசிக்காத போதிலும், அமெரிக்கப் படைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தாங்கள் பெருமளவில் நிறைவேற்றியுள்ளதாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




