நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்துக்கு பின்னால் சூழ்ச்சி?
அரசியல் தேவைக்காகவே அன்று சிறைச்சாலைக்குள் குட்டிமணி படுகொலை செய்யப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலைச் சம்பவத்திலும் அரசியல் பின்புலம் இருந்தது.
எனினும், நீர்கொழும்பு சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியின் நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனவே, இச்சம்பவம் அதற்குப் பதிலடியாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியவை வருமாறு:
“1983 கறுப்பு ஜூலையின்போது குட்டிமணி உட்பட 35 கைதிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னரும் சிலர் கொல்லப்பட்டனர்.
தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு அப்போதிருந்த அரசுக்குத் தேவை இருந்தது. இதன் ஓர் அங்கமாகவே குட்டிமணி உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
அரசியலுக்காக, அரசியல் தலைமைத்துவத்தின் ஆசியுடன் நடந்த சம்பவம் இதுவாகும்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் சிறைச்சாலைகளில் மோதல்கள் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்ந்தன. தற்போதும் மரணம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
எனினும், மேற்படி சம்பவங்களுடன் தற்போது நடந்த சம்பவத்தை ஒப்பிட முடியாது. குட்டிமணியை எப்படி கொன்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் அரசியல் தலையீடு இருந்தது. ஏனைய சில சம்பவங்களிலும் அரசியல் தலையீடு இருந்தது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை மண்டியிட வைத்தார்.
வெலிக்கடை சிறைச்சாலைச் சம்பவத்திற்கும் அரசியல் தொடர்பு இருந்தது. ஆனால், நீர்கொழும்பு சம்பவத்திற்கு ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து எவ்வித அரசியல் தலையீடும் இல்லை. எனவே, கோட்டாபய யுகத்துடன் இச்சம்பவத்தை ஒப்பிடுவது அநீதியானது” என்றார்.




