அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாக்களித்த ஆஸ்திரேலிய பெண் கைது
ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியகழ்வு அமுலாக்கப் பிரிவு (ICE) நடத்திய விசாரணையில், பல கூட்டாட்சித் தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
51 வயதான டெனிஸ் நடாலி மிக்லியோர் (Denise Nataly Migliore) என்ற பெண், தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்தது மற்றும் வாக்களிக்கப் பதிவு செய்வதற்காகப் பொய் வாக்குமூலம் அளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த அக்டோபர் 2022 மற்றும் அக்டோபர் 2024 ஆகிய காலப்பகுதிகளில், மிக்லியோர் கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதற்காக, தான் அமெரிக்கக் குடிமகன் என்று தெரிந்தே பொய் வாக்குமூலம் அளித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பின்னர், நவம்பர் 8, 2022 மற்றும் நவம்பர் 5, 2024 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்தல்களில், அவர் அமெரிக்கக் குடிமகனாக இல்லாததால் தகுதியற்ற வாக்குச்சீட்டுகளைப் பதிவு செய்துள்ளார் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆஸ்திரேலியப் பெண் ஜூலை 1 அன்று நியூ ஆர்லியன்ஸில் (New Orleans) உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
“இவரது கைதும் குற்றச்சாட்டுகளும் ICE சட்ட அமுலாக்கப் பிரிவினர் மற்றும் எங்களது கூட்டாட்சிப் பங்காளிகளின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாகும்” என்று தற்காலிக உதவிச் செயலாளர் லாரன் பிஸ் (Lauren Bis) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த வழக்கு குறித்து தனது ‘ட்ரூத் சோசியல்’ (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திப் பக்கத்தின் இணைப்பைப் பகிர்ந்துள்ள அவர், “இரண்டு கூட்டாட்சித் தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்தது விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
குடியேறியவர்கள் (Immigrants) அமெரிக்கக் கூட்டாட்சித் தேர்தல்களில் தவறான முறையில் செல்வாக்குச் செலுத்துவதாக ட்ரம்ப் இதற்கு முன்பும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்பதை விரிவான ஆய்வுகளும், மாநில தேர்தல் தரவுகளும் நிரூபித்துள்ளன.




