கானாவில் பிச்சை எடுத்து வந்த 300இற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாட்டினர் மீட்பு!
கானா தலைநகர் அக்ராவில் பிச்சை எடுக்கும் கும்பல்கள்களை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், 113 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர்.
கானா குடிவரவு சேவை, உளவுத்துறையின் உதவியுடன் நடத்திய சோதனையில் அவர்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 305 பேரின் நாடு வாரியான விவரங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் அவர்களில் 36 சிறுவர்கள், 77 சிறுமிகள், 66 பெண்கள் மற்றும் 126 ஆண்கள் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
சிறார்கள் பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்படுவதாகவும், வெளிநாட்டுப் பிரஜைகளை, குறிப்பாகப் பெண்களையும் குழந்தைகளையும், பெரும்பாலும் கட்டாய ஏற்பாடுகளின் கீழ் சுரண்டும் நடவடிக்கையை மனித கடத்தல் கும்பல்கள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் அரசாங்கத்தின் தலையீடுகள் இருந்தபோதிலும், கானாவில் மனித கடத்தல் நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





