காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 9 பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன சுகாதார அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீடு உட்பட நான்கு குடியிருப்புகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் மேற்படி தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல்களில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவ தரப்பில் இருந்து இன்னும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.
தாக்குதலுக்குள்ளான கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து, அங்கிருந்த தளபாடங்கள் எரிந்த நிலையில் காணப்படும் காட்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் தாக்கத்தால் கட்டிடத்தின் இடிபாடுகள் வீதியெங்கும் சிதறிக் கிடக்கின்றன
போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 930 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.





