போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் இஸ்ரேல்
போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும்,காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் உள்ள அல்-ரஷித் வீதியில் பயணித்த வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் (Dis drone) தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இதுதவிர, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி (al-Mawasi) பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதேவேளை, காசா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தம்பதியினர் இருவர் கொல்லப்பட்டதாக அல்-ஷிபா (al-Shifa) மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே “போர்நிறுத்த” உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல்கள் தொடர்கின்றன.
பெரிய அளவிலான போர்க்கள மோதல்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், காசாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
காசா சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட போர்நிறுத்த மீறல்களால் குறைந்தது 1,072 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 3,463 பேர் காயமடைந்துள்ளனர்.




