விட்டுக்கொடுக்க மறுக்கும் இரு துருவங்கள்: கைகூடுமா அமைதிப் பேச்சு?
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சிகள் கைகூடுமா என்பதில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வருகின்றது.
அணுசக்தி செறிவூட்டல் மற்றும் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவித்தல் போன்ற முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பாரிய கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மீதான இறையாண்மை மற்றும் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற ஈரானின் முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்க மறுப்பதன் காரணமாக, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளும் தற்போது முட்டுக்கட்டையை எட்டியுள்ளன.
ஈரான் தரப்பு ராஜதந்திர ரீதியிலான தீர்வுகளுக்குத் தயாராக இருப்பதாகக் கூறினாலும், தனது உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும், தேவைப்பட்டால் இராணுவ ரீதியாகப் பதிலடி கொடுக்கப் போவதாகவும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றது.
மறுபுறம், அமைதி முயற்சிகள் தொடர்ந்த போதிலும், இரு தரப்பினரும் தங்களின் பிடிவாதமான நிலைப்பாடுகளிலிருந்து பின்வாங்காமல் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்தச் சூழல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான ஒரு நிலையற்ற தன்மையையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், இந்த அமைதி முயற்சிகள் கைகூடாத பட்சத்தில், ஈரான் மீது கடுமையான இராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




