வயிற்றில் குத்திய கம்பியை அகற்றி இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்கள்
கிண்ணியா – பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதிலில் இருந்து கீழே விழுந்ததில், அங்கு கொங்கிரீட் போடுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த கம்பி அவரது அடிவயிற்றைத் துளைத்துள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (04) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வயிற்றில் கம்பியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞர், உடனடியாகக் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் (Ambulance) மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சத்திரசிகிச்சை (அறுவைசிகிச்சை) பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞரின் வயிற்றில் இருந்த கம்பியை அகற்றும் பணியில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தச் சத்திரசிகிச்சையின் மூலம் கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
இளைஞனின் அடிவயிற்றில் குத்திய கம்பி நெஞ்சுப் பகுதியைத் துளைத்துக்கொண்டு வெளியே நீட்டிக்கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இவ்வதிரடி சத்திரசிகிச்சையைத் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். ரொஹான் குமார், டாக்டர் துசிந்தன் மற்றும் டாக்டர் தல்ஹா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் வைத்தியசாலைகளின் குறைபாடுகளும், மருத்துவர்களின் தவறுகளும் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், உயிருக்குப் போராடிய இந்த இளைஞனின் உயிரை மீட்டெடுத்த மருத்துவ நிபுணர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.




