நேட்டோ மாநாடு நெருங்கும்வேளை உக்ரைன்மீது மிகப்பெரிய தாக்குதல்: 11 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ்மீது ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நகரின் தலைமை ராணுவ நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் 5 குழந்தைகள் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளதாகத் Timur Tkachenko தெரிவித்துள்ளார்.
மேலும், கீவ் நகரைச் சுற்றியுள்ள பிற பகுதிகளில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவசரகால அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தலைநகரின் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரண்டு மாவட்டங்களிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் இந்தத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் Tkachenko தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மாஸ்கோ கீவ் நகர் மீது இரண்டாவது “பெரிய தாக்குதலுக்கு” தயாராகி வருவதாக ஜெலென்ஸ்கி எச்சரித்திருந்த சில மணி நேரங்களிலேயே இந்தத் கொடூரத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.




