புகலிடம் கோருவோருக்கு நெருக்கடி : ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிகள் நடைமுறைக்கு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கோரிக்கை மீதான கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றத் தலைவர் மேக்னஸ் புரூனர், “முதல் முறையாக, எங்களிடம் ஒரு விரிவான ஐரோப்பிய அமைப்பு உள்ளது,” எனக் கூறினார்.
மேலும், இந்த சீர்திருத்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அவற்றின் எல்லைகள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சீர்திருத்தங்களுக்கு அமைய, எல்லை சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர், ஏழு நாட்கள் வரை நீடிக்கும் ஒரு செயல்முறையில் அடையாளம் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அவர்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் முகங்கள், பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
விண்ணப்பம் நிராகரிப்பு (Fast-track rejection)
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு அமைப்பில் அங்கம் வகிக்கும் சில உறுப்பு நாடுகளுக்கு, புலம்பெயர்ந்தோரை பரிசீலிக்கும் முடிவெடுக்கும் திறனில் தன்னாட்சி இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பில் முடிவெடுப்பதில் சிக்கல் நிலை நீடிக்கிறது.
இதனை எளிதாக்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்கீழ், இந்த செயல்முறை விரைவுப்படுத்தப்பட்டும். பெரும்பாலும் விண்ணப்பங்களை நிராகரிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
விரைவுபடுத்தப்பட்ட அல்லது சாதாரண புகலிட விண்ணப்பச் செயல்முறையைப் பெற வேண்டியவர்கள் யார், மற்றும் தங்கள் சொந்த நாட்டிற்கோ அல்லது இடைவழி நாட்டிற்கோ திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதே இந்தச் சரிபார்ப்பின் நோக்கமாகும்.
அதேநேரம் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படும் அல்லது அகதி அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக மொரோக்கோ, பங்காளாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் 80 சதவீதம் நிராகரிக்கப்படுவார்கள்.
அவர்களின் விண்ணப்பங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் “வெளி எல்லைகளுக்கு” – அதாவது தரைவழி எல்லைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு – அருகிலுள்ள மையங்களில், 12 வாரங்கள் வரை பரிசீலிக்கப்படும்.
ஒற்றுமை வழிமுறை (Solidarity mechanism)
ஐரோப்பிய ஆணையமும் ஐரோப்பிய ஒன்றிய முகமைகளும் தன்னார்வ ஒற்றுமைப் பொறிமுறையை (VSM) நிறுவின. இதுவே சோலிடர்டி மெகேனிஷம் என அழைக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி, ஒரு சட்டவிரோத குடியேறி முதலில் காலடி எடுத்து வைக்கும் நாடு, அவரது வழக்கைக் கையாள்வதற்குப் பொறுப்பாகும்.
இது இத்தாலி, கிரீஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளுக்குச் சுமையை ஏற்படுத்துகிறது. அந்த சுமையை குறைப்பதற்காக இந்தச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்கூறிய நாடுகளில் இருந்து வரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளுமாறு உறுப்பு நாடுகளைக் கட்டாயப்படுத்துகிறது.
இந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்குக் குறைந்தது 30,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்த முன்மொழிவுகளை ஏற்க உறுப்பு நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அவசரகாலத் திட்டம் (Contingency plan)
எதிர்பாராத இடம்பெயர்வுப் பெருக்கங்களால் ஏற்பட்டும் நெருக்கடியை சமாளிக்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015-2016-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியம் இதுபோன்ற ஒரு நெருக்கடியை எதிர்கொண்டது.
அப்போது, போரினால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இருபது லட்சத்திற்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைந்தனர்.
புதிய திட்டத்தின்கீழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பாதுகாப்புகளைக் குறைக்க உறுப்பு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளில் உள்ள தடுப்புக்காவல் மையங்களில், வழக்கமாக அனுமதிக்கப்படுவதை விட நீண்ட காலம் அவர்களைத் தடுத்து வைக்க முடியும்.
எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள இந்த திட்டங்களை சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.
புதிய விதிகளின் விளைவாக, குழந்தைகள் உட்பட பெரும்பாலான புலம்பெயர்ந்தோர், இந்தச் செயல்முறை முடியும் வரை தடுத்து வைக்கப்படுவார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.








